என் மலர்
உள்ளூர் செய்திகள்
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் உடல் தோண்டி எடுப்பு
- ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்தனர். இதுபோல் இளையராஜா உடலை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- பிரேத பரிசோதனை முடிந்து அறிக்கை தயாரித்த பின்னரே ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா என்பது தெரிய வரும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெய முருகன் (45) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த இளைய ராஜா (35) ஆகிய இருவரும் கடந்த 18-ந் தேதி கருணாபுரம் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் 2 பேரும் இறந்து போனார்கள்.
இதையடுத்து ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்தனர். இதுபோல் இளையராஜா உடலை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்து போன ஜெயமுருகன் மற்றும் இளையராஜா குடும்பத்திற்கு அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி கேட்டு உறவினர்கள் மாவட்ட கலெக்டர் பிரசாந்திடம் முறையிட்டனர்.
இளையராஜா உடலை எரித்து விட்டதால், புதைக்கப்பட்ட ஜெயமுருகன் உடலை மட்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதன்படி சென்னை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருந்து மருத்துவக் குழுவினர் நேற்று மாலை மாதவச்சேரி சுடுகாடு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஜெயமுருகன் உடலை வருவாய்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வருவாய் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.
பின்னர் பிரதே பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதபரிசோதனை முடிந்து அறிக்கை தயாரித்த பின்னரே ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா என்பது தெரிய வரும்.