என் மலர்
உள்ளூர் செய்திகள்
போலி பேராசிரியர்கள் நியமனம்: விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைப்பு
- துணைபோன கல்வி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து முறைகேடு.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் அண்ணா பல்கலைக் கழக குழுவினர் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.
இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 52 ஆயிரத்து 500 பேராசிரியர்களில் 1900 காலி இடங்கள் இருந்த நிலையில், அதை சரிகட்ட ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் தில்லு முல்லு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் எழுப்பிய குற்றச்சாட்டை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் இந்த ஆண்டு இணைப்புச் சான்றிதழ் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து முறைகேடாக பணி புரிந்தது போல் கணக்கு காட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரம் தற்போது விசுவரூபம் எடுத்து இருக்கிறது. தில்லு முல்லு செய்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யின் குழு நடத்திய ஆய்வுகளில், போலி விவரங்களை கண்டறியாமல் விட்டது எப்படி? என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான தகவல் அளிக்குமாறு, கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தார். உயர் கல்வித்துறையும் துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளிக்கையில், தில்லுமுல்லு செய்து வேலை பார்க்கும் பேராசிரியர்கள் மீதும் அதற்கு துணைபோன கல்வி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து இப்போது 3 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் முன்னாள் பேராசிரியர் குமாரவேல், ஏ.ஐ.சி.டி.இ. பிரதிநிதி சார்பில் உஷா நடேசன், அரசு தரப்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆபிரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து பல்கலைக்கழக வேந்தராக உள்ள கவர்னருக்கு சமர்ப்பித்து உள்ளது. அதே போல் உயர்கல்வித் துறை ஏ.ஐ.சி.டி.இ. ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.