என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் கவிழ்ந்து விபத்து- டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

- தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் நடந்த விபத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் பலியனார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்திற்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் மாடசாமி மற்றும் நடத்துனர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் நேரிடையாக ஆய்வு நடத்தினர். அப்போது விபத்தில் தனியார் பேருந்து சிக்கியதற்கு, வலதுபுறம் லாரியை பேருந்து முந்த முயன்றதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவர் மாடசாமியின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இது தொடர்பாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறுகையில்,
மேற்படி தனியார் பேருந்து கவிழ்ந்த இடத்திற்கு அருகிலேயே குழி இருக்கிறது. பேருந்து வேகமாக வந்து லாரியை முந்தி முன்னேறி சென்றிருந்தால் வேகமாக விழுந்திருக்கும். பலியும் அதிகரித்திருக்கும். பேருந்து வேகம் குறைவு என்பதால், சாலையை விட்டு இறங்கி சாய்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. படுகாயம் அதிகரித்துள்ளது. வலது புறம் முந்த முயற்சி எடுத்தது தவறு. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.