என் மலர்
உள்ளூர் செய்திகள்
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்: போலீசாருடன் தள்ளுமுள்ளு
- பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
சேதராப்பட்டு:
புதுவை அருகே அரசு நிவாரண தொகை வழங்காததை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியக்கோட்டகுப்பம் பகுதியில் 10 மற்றும் 11-வது வார்டு உள்ளது. பெஞ்ஜல் புயல் மற்றும் கனமழைக்கு இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை எனவும், புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூபாய் 2 ஆயிரம் தொகை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை தொகுப்பு இந்த இரண்டு வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு கோட்டகுப்பம் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் தீவிரமடைந்தது.
அப்போது அரையாண்டு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் தனியார் பள்ளி பஸ்சில் வந்த நிலையில் மறியல் போராட்டத்தால் சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் பஸ் நிறுத்தப்பட்டது.
ஆட்டோக்களில் வந்த பள்ளி மாணவர்களும் மறியலில் சிக்கித் தவித்தனர். காலாப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கனரக வாகனங்கள் அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
கோட்டகுப்பம் ரவுண்டானாவில் இருந்து சிவாஜி சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெஞ்ஜல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதம் அடைந்தது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 16 வார்டுகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது.
10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் சேதம் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. முற்றிலும் 2 பகுதி மக்களும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அரசு நிவாரணத்திற்கான எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.
அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கு உடனே தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதியை பாதிப்புக்கு ஏற்றார் போல் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினர்.
தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக வழி விடுங்கள் என கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டதன் பேரில் பள்ளி வாகனங்களை மட்டும் போராட்டக்காரர்கள் விரைவாக செல்ல அனுமதித்தனர்.
பின்னர் மீண்டும் சாலை மறியல் ஈடுபட்ட அவர்களிடம் கோட்டக்குப்பம் துணை போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பாதிப்புகளை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அப்போது போலீசாருக்கும் மறியல் ஈடுபட்ட ஒரு சில இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் கோட்டக்குப்பம் ரவுண்டான பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சுமார் 1:30 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தில் அந்த வழியாக அலுவலகம் சென்றவர்கள் சென்னை சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது போலீசார் வருவாய்த்துறை அதிகாரியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 2 வார்டு மக்களுக்கும் அரசு வழங்கும் நிவாரணத் தொகையை வழங்குவதாக2 வார்டு பெயர்களையும் நிவாரண பட்டியலில் இடம் பெறச் செய்தனர். இதனை போலீசார் பொதுமக்களிடம் காண்பித்தனர். இதன் அடிப்படையிலேயே பொதுமக்கள் தற்காலிகமாக தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கோட்டக்குப்பம் பெஞ்ஜல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு 50-க்கும் மேற்பட்ட நபர்களை படகுமூலம் மீட்டனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நிறைய கால்நடைகள் இறந்து போயின. நான்கு நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
எனவே கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை உடனே வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.