என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனி அருகே பரபரப்பு: நீதிமன்ற வாசலில் வாலிபர் ஓட, ஓட வெட்டிக்கொலை
- கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.
- திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ரகுமான் (35) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
அனீஸ் ரகுமானின் மனைவிக்கும், பிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்துடன் அவரது மனைவி சென்று விட்டார். அப்போது முதல் பிரசாத் மீது அனீஸ் ரகுமானுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அவரை தீர்த்து கட்டுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இன்று காலை பிரசாத் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் அனீஸ் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க முயன்றார்.
இதனால் சுதாரித்துக் கொண்டு பிரசாத் ஓட ஆரம்பித்தார். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஓடிய போது அவரை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதை பார்த்ததும் பொதுமக்கள் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய அனீஸ் ரகுமானை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரசாத் மீது திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்ட பகலில் கோர்ட்டு வளாகம் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.