என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் கனமழை: பேரிடர் மீட்பு குழு மீண்டும் புதுச்சேரி வருகை

- முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி தாக்கிய பெஞ்ஜல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், துணை மின்நிலையங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டமாக கணக்கிடப் பட்டுள்ளது.
புயலுக்கு பின் புதுச்சேரி நகர பகுதி ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமங்களில் அணைகள் திறப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள வில்லை.
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வருகிற 16-ந் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக புதுச்சேரி முழுவதும் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழி சாலை, ஆரோவில் பகுதி களில் கனமழை பெய்தது. நகர பகுதியான லேசான மழைபெய்தது. பேரிடர் மேலாண்மை துறை கேட்டு கொண்டதற்கிணங்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு புதுச்சேரிக்கு மீண்டும் வந்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தர விட்டார். இதனால் இன்று காலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. பஸ்களில் கூட்டம் இல்லை
மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆறு, ஏரி, குளம் உட்பட நீர் நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மழையால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத் திலும், இடை யிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே புதுச்சேரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
புதுச்சேரி கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும். இந்த வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். மீனவர்கள் தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல், அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வரும்படி கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.