என் மலர்
உள்ளூர் செய்திகள்
நான் யார் தெரியுமா? நீ எந்த ஸ்டேசன்? திருப்பூரில் நடுரோட்டில் போலீஸ்காரரை மிரட்டிய வாலிபர்கள்
- நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
- திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருபவர் அறிவழகன் . இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தாடிக்காரமுக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அறிவழகன் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதினர். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சாலையில் விழுந்தனர்.
லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சாலையில் இருந்து எழுந்த இருவரும் போலீஸ்காரர் அறிவழகனைப் பார்த்து கடுமையாக திட்டியதோடு நான் யார் தெரியுமா? யார்கிட்ட பேசுற, நீ எந்த ஸ்டேசன்ல வேல பாக்குற சொல், நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
ஒருகட்டத்தில் வாலிபர் ஒருவர், நான் நாளைக்கு பாரின் போகனும், இப்படியே எப்படி செல்வது, நீயே சொல்லு, நீ எந்த ஸ்டேசன்ல இருக்க என தனது மொபைலில் வீடியோ எடுத்தபடியே போலீஸ்காரர் அறிவழகனை மிரட்டும் வகையில் பேசினார் .
இதையெல்லாம் கேட்டபடி பொறுமையாக பைக்கில் அமர்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் அறிவழகன் செய்வதறியாது திக்குமுக்காடினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நைசாக போலீஸ்காரர் அறிவழகனை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
போலீஸ் உடையில் இருந்த நபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னாவது என அப்பகுதியில் இருந்த சிலர் பேசிக்கொண்டனர். போலீஸ்காரரை மிரட்டும் வகையில் பேசிய நபர்கள் இருவரும் யார் என திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.