என் மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை-போடி இடையே மின்சார ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது
- சுமார் 85 முதல் 90 கி.மீ. வேகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- போடி வருவதற்கு 1 மணி நேரம் 36 நிமிடம் ஆனது.
போடி:
தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு ரூ.436 கோடி செலவில் அகல ரெயில் இருப்புப் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர் மதுரையில் இருந்து போடிக்கும், போடியில் இருந்து மதுரைக்கும் தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடிக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் ரெயில் மதுரை வழியாக போடி வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரெயிலாக வரக்கூடிய அதி விரைவு ரெயில், மதுரையில் இருந்து போடி வரை டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு வருகிறது.
இதனால் சுமார் 40 நிமிடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சீர் செய்யும் வகையில் போடியில் இருந்து மதுரை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்தது.
இந்நிலையில் விரைவில் மதுரையில் இருந்து போடிக்கு மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தது.
இதன் முக்கிய கட்டமாக கடந்த வியாழக்கிழமை போடியில் இருந்து மதுரை வரை உள்ள மின்சார வழி தடக் கம்பிகளில் மின்சார ரெயில் போக்குவரத்திற்கு மின் தொடர்பு ஏற்படுத்தித் தரும் பேன்டோகிராப் எனப்படும் மின்தட இணைப்பு உபகரணம் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதன் பின் முதன்முறையாக மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே இன்று முதல் சென்னையில் இருந்து காட்பாடி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியே வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் சென்னை அதிவிரைவு ரெயில் மற்றும் மதுரையில் இருந்து தினசரி போடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரெயிலாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது.
110 கி.மீ. வேகத்தில் சோதனை செய்யப்பட்ட மின்சார ரெயில் முதல் நாள் என்பதால் மதுரையில் இருந்து சுமார் 85 முதல் 90 கி.மீ. வேகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிபட்டி கணவாய் மற்றும் போடி, பூதிபுரம் அருகே உள்ள பாலங்களில் வேகம் குறைக்கப்பட்டதன் காரணமாக போடி வருவதற்கு 1 மணி நேரம் 36 நிமிடம் ஆனது.
இன்று முதன்முறையாக மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கியதை முன்னிட்டு இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார தடங்களில் 25,000 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின்சார தடங்கள் உள்ள இருப்புப் பாதைகளில் அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதைகளை கடப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் மற்றும் ரெயில்வே போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.