என் மலர்
உள்ளூர் செய்திகள்
அமராவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்- பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
- அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை முழு கொள்ளளவான 90அடியை எட்டியது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் ஆற்று பாலத்தின் அருகே பழனியில் இருந்து சண்முக நதி ஆற்றில் திறந்து விடப்பட்ட 20 ஆயிரம் கன அடி தண்ணீர் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றில் கலந்து சுமார் 57 ஆயிரம் கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.
இதன் காரணமாக தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள படித்துறை மூழ்கியது. ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் அலங்கியம்-கொங்கூர் தரைப்பாலம் மற்றும் வீராச்சிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துக்கால்புதூரில் உள்ள ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில்வெள்ளப்பெருக்கு காரணமாக ஈஸ்வரன் கோவில் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.