என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளைஞர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள கற்று கொடுக்க வேண்டும்- கவர்னர் தமிழிசை அறிவுரை

- தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
- மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பவுன்டேஷன், யூனிட்டி கட்டிடத்தில் இன்று சர்வதேச ஆன்மிக மாநாடு தொடக்க விழா நடந்தது.
ஆரோவில் செயலர் ஜெயந்திரவி வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுவை கவர்னர் தமிழிசை, ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆரோவில் வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் இளைஞர்கள் அதிகம். இது மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்று. இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்ல வேண்டும். தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகிறது. அதிக ஆற்றலோடு, ஆக்கப் பூர்வமாக செயல்பட உதவுகிறது. நம்முடைய நினைவாற்றலை, கவனத் திறனை பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில், தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். புதுவைக்கு வேதபுரி என்று பெயர் உண்டு. இது ஆன்மீக பூமி.
இங்கு 30 முதல் 40 சித்தர் பீடங்கள் இருக்கின்றன. ஆரோவில் நகரமும் இந்த பகுதியில்தான் இருக்கிறது. இங்கிருந்து, மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.