என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயம் அருகே வாய்க்காலில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

- காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் மனித எலும்புக்கூடு ஒன்று 2 பாகங்களாக கிடந்தது.
- எலும்புக்கூடானது வாய்க்காலில் தண்ணீா் வந்தபோது வேறு எங்கிருந்தாவது தண்ணீரில் அடித்து வந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் உள்ள திட்டம்பாளையம் முதல் மங்களப்பட்டி வரை பல்வேறு கிராமங்கள் வழியாக கீழ் பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் நிறைய தண்ணீர் செல்லும் காலங்களில் குளிப்பதற்காகவும், துணி துவைக்கவும் வருபவர்கள் தவறி விழுந்து நீரில் அடித்து வரப்பட்டு உடல்கள் ஒதுங்குவதும், அவற்றை போலீசார் மீட்பதும் அவ்வப்போது நடக்கும்.
கடந்த 2 மாதமாக வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு காய்ந்து கிடக்கிறது. இந்தநிலையில் காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் மனித எலும்புக்கூடு ஒன்று 2 பாகங்களாக கிடந்தது.
எலும்புக்கூட்டின் அருகே 2 சாக்கு பைகள் கிடந்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வாய்க்காலில் தண்ணீர் வந்து பல நாட்கள் ஆன நிலையில் மனித எலும்பு கூடு கிடந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த உடல் பாகங்கள் ஆணா? பெண்ணா? நீரில் அடித்து வரப்பட்டு இறந்தாரா அல்லது வேறு எங்காவது கொன்று இங்கு வந்து உடலை வீசி சென்றனரா என காங்கயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மனித எலும்பு கூட்டின் மேல் ஆண் அணியக்கூடிய உள்ளாடை இருந்ததால், ஆணின் எலும்புக்கூடாக இருக்கலாம். மேலும் இந்த எலும்புக்கூடானது வாய்க்காலில் தண்ணீா் வந்தபோது வேறு எங்கிருந்தாவது தண்ணீரில் அடித்து வந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முள்ளிபுரம் கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.