என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா
- தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை.
- கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி க்குட்பட்ட 55-வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் 38 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு , வீடு இல்லாமல் வாழ்விடத்திற்காக குடி பெயர்ந்தவர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 38 ஆண்டு காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.