என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மெட்ரோ ரெயிலில் 6 பெட்டிகள் இணைப்பு
- தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
- 2.5 நிமிட இடைவெளியில் ரெயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
சென்னை:
சென்னையில் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலும் அதேபோல் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தொடக்கத்தில் கட்டணம் சற்று அதிகமாக இருந்ததால் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் விரைவான பயணம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி டென்சனாக பயணிக்க வேண்டியதில்லை என்பதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே கூடுதலான பெட்டிகளை இணைக்க வேண்டும். முதல் வகுப்பு பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது 4 பெட்டிகள் கொண்ட 42 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இனி 6 பெட்டிகள் கொண்ட 52 ரெயில்களை இயக்குவதற்கு ஆய்வு நடக்கிறது. மேலும் 2.5 நிமிட இடைவெளியில் ரெயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
முதல்வகுப்பு பெட்டிகளை பொறுத்தவரை கட்டணம் இருமடங்கு. எனவே பயணிகளிடம் வரவேற்பு குறைவாகவே இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு முதல் வகுப்பு பெட்டிகள் பெண்கள் பெட்டிகளாக மாற்றப்பட்டுவிட்டது.