என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பாலியல் தொல்லை கொடுத்தனர்- மாணவிகள் கண்ணீர் பேட்டி
- பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள்.
- மாணவிகளின் குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ஏராளமான மாணவிகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயின்று வருகிறார்கள். இவர்கள் பேராசிரியர்கள் மற்றும் நடன உதவியாளர்கள் 3 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்துள்ளனர்.
கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் எந்தெந்த வகையில் பாலியல் தொல்லை கொடுத்தனர்? என்பது பற்றி சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலாஷேத்ராவில் பேராசிரியரும், நடன உதவியாளர்களும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது எப்படி? என்பது பற்றி மாணவிகள் சிலர் கண்ணீர் மல்க அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியதாவது:-
என்னிடம் பேராசிரியரும், நடனம் சொல்லி கொடுக்கும் உதவியாளர்கள் 3 பேரும் ஆபாசமாக நடந்து கொண்டனர். செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்புவது... வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பேசுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். சில நேரங்களில் அவர்கள் பார்க்கும் பார்வையே ஆபாசமாக இருக்கும். இதனால் பலமுறை நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.
இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் கூறும்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள். அவர்களின் பார்வையால் உடம்பே கூசும். இதுபோன்ற நேரங்களில் நான் ஆடையில்லாமல் இருப்பது போன்றும் உணர்ந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மாணவிகளின் இந்த குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா இன்று விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கலாஷேத்ரா மாணவிகளிடம் சீனியர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் போலீசில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மாணவிகள் தற்போதைய சூழலில் போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை தரப்பில் கிரிமினல் விசாரணை எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.