என் மலர்
உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்- கணவன், மனைவி பலி
- விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 44). கார் மெக்கானிக். இவரது மனைவி சங்கீதா (40). இவர்களது மகன் அஜய் (16), மகள் அனுஷ்கா (14) உள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வதற்காக முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை குடும்பத்தோடு காரில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை ஸ்ரீதர் ஓட்டி சென்றார். கண்ணமங்கலம் அடுத்த அய்யம்பாளையம் கூட்ரோடு வேலூர்-திருவண்ணாமலை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஆந்திர பதிவெண் கொண்ட காரும், ஸ்ரீதர் ஓட்டி சென்ற காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஸ்ரீதர் காரில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சங்கீதா மற்றும் அஜய், அனுஷ்கா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்ணமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியிருந்த ஸ்ரீதர் உடலை வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 2 கார்களும் சுக்கு நூறாக நொறுங்கியது.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சங்கீதா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அஜய் மற்றும் அனுஷ்காவிற்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.