என் மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னிபஸ் கவிழ்ந்து பயணி பலி- 27 பேர் படுகாயம்
- தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி ஆம்னி பஸ் மீது மோதியது.
- விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே அதிகாலை நடந்த சாலை விபத்தில் பயணி பலியானார். 27 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. இதில் 54 பயணிகள் பயணம் செய்தனர். 3 டிரைவர்கள் இருந்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த லக்கூர் கைகாட்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி சென்றது.
அதனை ஆம்னி பஸ் டிரைவர் முந்த முயன்றார். அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் மோதி வெங்கனூர் ஓடை பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.
அப்போது பின்னால் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். அவரது பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை. விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் ராமநத்தம் போலீசார் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினார்கள். மேலும் பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்பட்டதும் ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை ராமநாத்தம் போலீசார் தேடி வருகிறார்கள்.