என் மலர்
உள்ளூர் செய்திகள்
எருது விடும் நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு
- விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.
- மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.
இதில் காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் மண்டு பகுதியில் மாலை 3 மணி அளவில் எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எருதுகளை பொதுமக்கள் இளைஞர்கள் அலங்கரித்து இழுத்துச் சென்றனர்.
இதில் மாடுகள் அங்குமிங்குமாக இழுத்துச் சென்றபோது மாடு ஆக்ரோசமாக ஓடியதில் கெரகோடஅள்ளியை சேர்ந்த சுதர்சன் (வயது25), ராமாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோர் மாடு முட்டியதில் வயிற்றில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேபோல் மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மாடு முட்டி காயமடைந்த சுதர்சன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சுதர்சனின் உடல் நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கும்பார அள்ளி ஊராட்சியில் நடந்த எருது விடும் நிகழ்ச்சியில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு எருது விடும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
காரிமங்கலம் ராமசாமி கோவிலில் இன்று மாலை எருது விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.