search icon
என் மலர்tooltip icon

    கரூர்

    • லாரியில் உள்ள பெட்டியில் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது.
    • கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.

    குளித்தலை:

    திருச்சி மாவட்டம், ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் லாரியில் பீட்ரூட், கேரட், பீன்ஸ், நூக்கோல், சவ் சவ் உள்ளிட்ட காய்களை தினமும் கும்பகோணம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது, லாரியில் டிரைவர் மட்டுமே வருவார்.

    வாரத்தில் ஒருநாள் டிரைவருடன் பணம் வசூல் செய்பவரும் சேர்ந்து வந்து காய்களை கும்பகோணம் மார்க்கெட்டில் இறக்கிவிட்டு பணம் வசூல் செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நள்ளிரவு ஒரு லாரி மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்துக்கு சென்றது. அங்கு காய்கறியை இறக்கிவிட்டு ஊரு திரும்பினர். லாரியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் ஓட்டினார். அவருடன் பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார்.

    லாரியில் உள்ள பெட்டியில் வசூலான பணம் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. லாரி அதிகாலை திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் காவல்காரபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் வந்தது. அப்போது டிரைவர் ஆனந்த் லாரியை நிறுத்திவிட்டு உடன் வந்த லோகேசுடன் அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார்.

    அப்போது அங்கு காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. திடீரென்று அவர்கள் லாரியில் ஏறி பெட்டியை உடைத்து ரூ.42 லட்சத்தை எடுத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பிவிட்டனர்.

    டீ குடித்து விட்டு வந்த டிரைவர் ஆனந்த், லோகேஷ் ஆகியோர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தர், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் ஆனந்த், லோகேசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து தனிப்படைகள் அமைத்தும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
    • கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கில் ஜாமின் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ந்தேதி கேரளாவில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதைதொடர்ந்து இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    • பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கரூர்

    கரூர் தெற்கு காந்திகிராமம் அருகே உள்ள கம்பன் தெருவில் வசித்து வந்தவர் செந்தில் குமார். இவரது மகன் ஜீவா (வயது 20). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த வாரம் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த அவர் கடந்த 22-ந் தேதி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது தாய் சுந்தரவல்லி, தான்தோன்றி மலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காந்திகிராமம் அருகே உள்ள இ.பி. காலனி பகுதியை சேர்ந்த சசிக்குமாருக்கும் மாயமான வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் சசிகுமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து ஜீவாவுக்கு மது வாங்கி கொடுத்து, கரூர் அருகில் உள்ள தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

    பின்னர், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் தாசில்தார் முன்னிலையில் ஜீவாவின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது அவரது உடல் 7 துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்டிருந்தது என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

    பின்னர், போலீசார் முக்கிய குற்றவாளியான சசிகுமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை வலை வீசி தேடுகின்றனர்.

    கைதான சசிகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    கரூர், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் நெருங்கிய நண்பன் நான். அவருடன் ஜீவாவுக்கும் பழக்கம் இருந்தது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.

    அதன் பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது ஜீவா அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததுவிட்டதாக கூறப்படுகிறது. என் நெருங்கிய நண்பரை கொன்று விட்டதால் அவர் மீது கோபம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜீவா எனது தலையை சிதைத்து விடுவேன் என இன்ஸ்டா கிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்ததும் எனக்கு அவன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் அவ்வப்போது கனவில் வந்து, என்னை கொலை செய்த ஜீவாவை இதுவரைக்கும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்றும், அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்றும் கூறியதாக சொன்னார். இதனால் அவனை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து காத்திருந்தோம்.

    கடந்த வாரம் விடுமுறையில் வந்த ஜீவாவை நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்து திட்டமிட்டபடி வெட்டி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார்.
    • எந்திரம் வெடித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே கடவூர் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). பழைய இரும்பு வியாபாரி. நேற்று கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போல் கிராமங்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்து மதியம் குடும்பத்துடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    பின்னர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்கு சென்று பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது விவசாய பயிருக்கு மருந்து அடிக்கும் பழைய ஸ்பிரே எந்திரத்தில் இருக்கும் பித்தளை பொருட்களை எடுப்பதற்காக அதை சம்மட்டியால் அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக ஸ்பிரே எந்திரம் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் கிருஷ்ண மூர்த்தி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த வெடி சத்தம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. சம்பவத்தின்போது கிருஷ்ணமூர்தியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. கிருஷ்ணமூர்த் தியின் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது கிருஷ்ண மூர்த்தி உடல் சிதறி இறந்து கிடந்ததை கண்டு அசிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்த கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குசென்று பழைய இரும்பு பொருட்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி. செந்தில் குமார், தோகை மலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீ சார், கிருஷ்ண மூர்த்தியின் உட லைகைபற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். எந்திரம் வெடித்ததற்கான காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது.

    காற்றழுத்தம் காரணமா? அல்லது அதில் வெடி பொருட்கள் இருந்ததா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரத்தின் ஸ்ப்ரே மோட்டாரில் ஆயில் பெட்ரோல் இருந்துள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகளை வரவழைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பலி யான கிருஷ்ண மூர்த்திக்கு மல்லேஸ்வரி (44) என்ற மனைவியும், ஜெயக்குமார் (22), சிவமுருகன் (12) ஆகிய 2 மகன்களும் செல்வி (17) என்ற மகளும் உள்ளனர். ஸ்பிரே எந்திரம் வெடித்து வியாபாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் ரோப் கார் பாதி வழியிலேயே நின்றுளளனர்.
    • ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    குளித்தலை அருகே அய்யர்மலையில் திடீரென ரோப் கார் பழுதடைந்து நின்றதால், பாதி வழியிலேயே பக்கதர்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.

    திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் ரோப் கார் பாதி வழியிலேயே நின்றுளளனர்.

    ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்தில் இருந்து கயிறு நழுவியதால் ரோப் கார் பாதியில் நின்றுள்ளது.

    ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைத்தார்.

    இந்நிலையில், இன்று ரோப் கார் சேவை பழுதாக நின்றுள்ளது. இதைதொடர்ந்து, கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

    பாதியில் நின்ற ரோப் காரில், 3 பெண் பக்தர்கள் வெகு நேரமாக தவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து, ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
    • வழக்கில் தொடர்பு உடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    கரூர்:

    கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் உட்பட சிலர் மீது சார் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 16ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளரான பிரவீன் ஆகிய 2 பேரை கைது செய்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த போலீஸ்காவல் நிறைவடைந்ததையடுத்து நேற்று பிற்பகல் 2 பேரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். முன்னதாக கரூர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட சிலர் மீது மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த கொலை மிரட்டல் வழக்கில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வாங்கல் போலீசார் இன்னொரு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி பரத் குமார் அனுமதி வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து வாங்கல் போலீசார் ரெண்டு பேரையும் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 3-வது நாளாக அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த போலீஸ் காவல் இன்று நிறைவடைவதால் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு உடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னையில் முகாமிட்டு கண்காணித்துவருகிறார்கள். இதனிடையே இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    • வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்.

    ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.

    போலீசார் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    • திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.

    கரூர்:

    ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2-ல் நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்பு நேற்று காலை 11.50 மணி அளவில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 31-ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மதியம் 1.15 மணியளவில் கரூர் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

    எம்.ஆர்.விஜயபாஸ்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் தகவல் தெரிந்தவுடன் ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதனையொட்டி கரூர் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள்.

    கரூர்:

    கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான செல்வராஜ், பிரவீன் உள்பட 7 பேர் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் மற்றும் பிரவீன் உள்பட 13 பேர் தன்னை மிரட்டி அந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் அளித்தார். இதில் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதை அறிந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். பின்னர் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு கேரள மாநிலம் திருச்சூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அதன்பின்னர் ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என போலியான நான் டிரேசபிள் சான்றிதழ் வழங்கிய வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல், நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சம்பிரதாய கைது (பார்மல்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவை திருச்சி மத்திய ஜெயில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் போலீசார் வழங்கினர்.

    இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இதற்காக கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர்.

    விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.

    கரூர்:

    கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீண் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.

    இதையடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் போலியான 'நான்டிரேசபிள்' சான்றிதழ் கொடுத்து உடந்தையாக இருந்ததாக கூறி சென்னை வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.

    அதில் தன்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து வாங்கல் போலீசார் திருச்சி வந்து சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ததாக குறிப்பாணை கடிதத்தில் கையெழுத்து பெற்றனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேட தொடங்கினார்கள்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து விட்டதாகவும், இதுபற்றி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் போலீஸ் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர்.

    இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தனர்.

    அரசியல் முன் விரோதத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியாகி இருந்த நிலையில் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேட தொடங்கினார்கள். இதை அறிந்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. ஒரு மாதமாக அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அவரது முன் ஜாமின் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

    இதன் பின்னர் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக கரூர் அழைத்து வரப்பட்டார். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை

    கரூர்:

    கரூர் தோரணக்கல்பட்டியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ரகு, சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ், யுவராஜ் பிரவீன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கலாம் என கருதிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது.

    இதற்கிடையே பிரச்சனைக்குரிய அந்த 22 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    பின்னர் வழக்கு தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ், நிலம் மாற்றியதில் சாட்சியாக செயல்பட்ட முனிய நாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்து 8-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

    அதன் பின்னர் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜயபாஸ்கரின் ஆதரவாளருமான கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை குழந்தைவேலிடம் விசாரணை செய்தனர். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கரூர் பசுபதி செந்தில் உட்பட 7 பேரை திடீரென கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×