search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே விபத்து- 4 பேர் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே விபத்து- 4 பேர் பலி

    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • கிருஷ்ணகிரி- சென்னை தேசியநெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பர்கூர்:

    கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை தறிகெட்டு ஓடிய மினிலாரி எதிரே வந்த டாரஸ் லாரி மற்றும் சரக்கு வேன் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினிலாரி டிரைவர், டாரஸ் லாரி டிரைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயம் பாரம் ஏற்றி வந்த சரக்கு மினி லாரி ஒன்று புறப்பட்டு சென்னை நோக்கி வந்தது.

    இந்த மினி லாரியை டிரைவர் ராயன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த சரக்கு மினி லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள சாலையில் தறிகெட்டு ஓடியது.

    அப்போது எதிரே ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதைத்தொடர்ந்து பின்னால் வந்த சரக்கு வேன் டாரஸ் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.


    இந்த விபத்தில் மினி லாரியில் வந்த டிரைவர் ராயன் மற்றும் டாரஸ் லாரியை ஓட்டி வந்த டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த அருள்ஜோதி மற்றும் அதே வண்டியில் வந்த மணி என்கிற ஜீவா உள்பட 4 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    விபத்தில் டாரஸ் லாரியில் வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த காதர் (35), விஜய் (30), ராஜேஷ் (37) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனி தலைமையில் மீட்பு படை குழுவினர் பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி, அன்புமணி, விக்ணேஷ், சங்கர், பிரதாப், விஸ்வநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்தை டி.எஸ்.பி. முத்து கிருஷ்ணன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


    விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் கிருஷ்ணகிரி- சென்னை தேசியநெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும், டாரஸ் லாரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் விபத்தில் சிக்கியுள்ள நிலையில் மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினரை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×