என் மலர்
உள்ளூர் செய்திகள்
குவைத் தீ விபத்து: குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியாததால் அச்சம்
- முகமது ஷெரிப் செல்போன் அழைப்பை எடுக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி.
- தற்போதைய நிலையைதெரியப்படுத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது35). இவர் கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் போர்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் தங்கி வேலை செய்து வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 49 பேர் பலியானார்கள். இதனால் பதற்றம் அடைந்த இவரது குடும்பத்தினர் முகமது ஷெரிப் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது கடந்த பல மணி நேரமாக முகமது ஷெரிப் செல்போன் அழைப்பை எடுக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் குவைத் நாட்டில் உள்ள சக தொழிலாளர்களை தொடர்பு கொண்ட போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். ஆனால் அது முகமது ஷெரிப் புகைப்படம் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே மத்திய-மாநில அரசுகள் முகமது ஷெரிப் குறித்து தற்போதைய நிலை என்ன என்பதை கண்டறிந்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.