என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவு குறித்து ஆய்வு செய்யப்படும் -மு.க.ஸ்டாலின்
- இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன.
- இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர் கொள்ளும் பிரச்சனையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டிலும், நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலை நிலப்பகுதிகள் அதிகம் உள்ளன.
அங்கு பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
வனத் துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுனர்களைக் கொண்ட குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகாால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.