search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை புழக்கத்தில் விட்ட 2 வாலிபர்கள் கைது
    X

    மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை புழக்கத்தில் விட்ட 2 வாலிபர்கள் கைது

    • ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மெத்தபட்டமைன் மற்றும் கஞ்சா சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி பெரியகுளம் வடகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது கேரள பதிவெண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சா மற்றும் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் 30 பாக்கெட்டுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் சப்ளையில் யார்? யார்? ஈடுபட்டுள்ளனர் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, கம்பம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன், கார் மற்றும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனைக்கு ஆட்களை நியமித்து அவர்கள் கொடுக்கும் முன் பணத்தை வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விலை உயர்ந்த மெத்தபட்டமைன் மற்றும் கஞ்சா சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து முக்கிய தடயங்களை கண்டுபிடித்த போலீசார் திருவனந்தபுரத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மோகன் நோர்பட் (வயது28), ஆதர்ஸ் (25) ஆகிய 2 பேரை திருவனந்தபுரத்தில் தனிப்படை போலீசார் ஒரு மாதத்திற்கு பின்பு கைது செய்து பெரியகுளத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் கஞ்சா, மெத்தப்பட்டமைன் விற்பனைக்காக பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தின் மூலம் அங்கு சொகுசுவாழ்க்கை வாழ்ந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களை பெரியகுளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×