என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்- அமைச்சர் செந்தில்பாலாஜி
- அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன நோக்கத்துடன் இந்த சோதனையை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
- ஆவணங்கள் அடிப்படையில் கேட்டாலும் பதில் சொல்ல தயார்.
சென்னை:
அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சோதனை நடத்த வந்தபோது அவர் நடைபயிற்சிக்காக வெளியில் சென்று இருந்தார். அமலாக்கத்துறை சோதனை பற்றி அவருக்கு நண்பர்கள் போனில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நடைபயிற்சியை பாதியில் முடித்துக்கொண்டு அவசரம் அவசரமாக அவர் வீடு திரும்பினார். அப்போது அங்கு திரண்டிருந்த நிருபர்கள் அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-
இதற்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் நான் நடைபயிற்சியை நிறுத்தி விட்டு இங்கு வந்திருக்கிறேன்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன நோக்கத்துடன் இந்த சோதனையை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. என்ன ஆவணம் தேடி வந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதைப்பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.
எனது சகோதரர் வீட்டில் நடந்த சோதனையின்போது என்னென்ன எடுத்து உள்ளனர் என்பது பற்றி எழுதி கொடுத்துள்ளனர். அதில் எனது உறவினர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே இன்று அதிகாரிகள் என்ன சோதனை நடத்துகிறார்கள் என்று தெரியாது.
உள்ளே அதிகாரிகள் எனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் நான் இங்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது. தவறாகி விடும். சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.
வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இந்த சோதனை குறித்து எந்த விளக்கம் கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆவணங்கள் அடிப்படையில் கேட்டாலும் பதில் சொல்ல தயார். இது பற்றி வெளியில் விரிவாக பேச இயலாது.
நான் இப்போது எனது வீட்டுக்குள் செல்கிறேன். சோதனை முடிந்த பிறகு இதுபற்றி விரிவாக உங்களிடம் பேசுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.