search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேட்டில் வீட்டை விட்டு மாயமான மாணவன் 3 மணி நேரத்தில் மீட்பு
    X

    கோயம்பேட்டில் வீட்டை விட்டு மாயமான மாணவன் 3 மணி நேரத்தில் மீட்பு

    • விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சபரிஷ் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • புகார் அளித்த 3 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறுவனை கண்டுபிடித்த கோயம்பேடு போலீசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு, வள்ளியம்மை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சத்திய சுந்தரம். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி இவர்களது மகன் சபரிஷ் (வயது 14) . விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை சபரிஷ் திடீரென மாயமாகி விட்டான். பல இடங்களில் தேடி பார்த்தும் அவன் கிடைக்கவில்லை. மேலும் சபரிஷ் பெற்றோருக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடந்தது. அதில் 'என்னால் ஒரு நல்ல மகனாக இருக்க முடியவில்லை. சரியாக படிக்க முடியாததால் என்னால் உங்களுக்கு அசிங்கமும் அவமானமும் ஏற்படுகிறது. நான் பெரிய ஆளாக வருவேன் என்று என் மீது வைத்துள்ள நம்பிக்கையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன், என்னை மன்னித்து விடுங்கள் மறந்து விடுங்கள், என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சபரிசின் பெற்றோர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் விருகம்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த சிறுவன் சபரிசை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    சிறுவன் சபரிஷ் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் என்பதால் விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை புகார் அளித்த 3 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த கோயம்பேடு போலீசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×