search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.எல்.ஏ. கூறியும் மகப்பேறு பிரிவில் சரிசெய்யப்படாத கழிவறை பாதை
    X

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கழிவறையை எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    எம்.எல்.ஏ. கூறியும் மகப்பேறு பிரிவில் சரிசெய்யப்படாத கழிவறை பாதை

    • மகப்பேறு பிரிவில் கழிப்பறைக்கு செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டதா? என்று கேட்டபோது, அதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
    • கூட்டம் முடிந்த பின்பு எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் உடனே அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவுக்கு சென்றார்.

    தருமபுரி,

    தருமபுரியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தருமபுரி மாவட்டத்தில் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இருந்தும் உள்புற நோயாளிகள், புறநோயாளிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுகொள்வதற்காக நவீனமயமாக்கப்பட்டு புதிதாக மகப்பேறு பிரிவு என்று தனியாக கட்டிடம் அமைக்கப்பட்டது.

    மகப்பேறு பிரிவில் கழிவறைக்கு செல்லும் பாதை சிதலமடைந்து காணப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மலரில் செய்தி வெளியானது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி நாகர் கூடல் பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் பார்வையிட்டு நலம் விசாரிக்க நேரில் சென்றார்.

    மாலைமலர் செய்தியை நினைவுகூர்ந்த அவர் மகப்பேறு பிரிவில் உள்ள கழிவறை பாதையை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு டைல்ஸ் கற்கள் சிதலமடைந்து கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள் யாரும் கழிவறைக்கு செல்லமுடியாத நிலையை பார்த்தார். உடனே டீன் மற்றும் மருத்துவ நிர்வாக அலுவலர்களை அழைத்து உடனடியாக இந்த பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று (15-ந்தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எம்.பி. செந்தில்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.பி.வெங்கடேவரன் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகளை அழைத்து கலெக்டர் முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவில் கழிப்பறைக்கு செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டதா? என்று கேட்டபோது, அதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

    அதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்பு எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் உடனே அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவுக்கு சென்றார். அங்கு கழிவறை பாதையை சரி செய்யப்பட்டதா? என்று ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியடைந்தார். அங்கு எந்தவொரு பணியும் செய்யாமல் பழையபடியே கழிவறைக்கு செல்லும் பாதை சிதலமடைந்து காணப்பட்டது. இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. உடனே மருத்துவ நிர்வாக அதிகாரிகளை நேரில் அழைத்து, நடைபாதை சரிசெய்து விட்டதாக கலெக்டர் முன்னிலையில் என்னையே ஏமாற்றி விட்டீர்கள் என்றும், உடனடியாக இதை சரிசெய்யா விட்டால் தலைமை சுகாதார துறையிடம் நானே புகார் தெரிவிப்பேன் என்றும், அவர் உடனடியாக இந்தபாதையை தரமான முறையில் சரி செய்ய வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.

    எம்.பி., கலெக்டர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மகப்பேறு பிரிவில் கழிவறைக்கு செல்லும் பாதையை சரி செய்யாமலே சரி செய்துவிட்டதாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் எம்.எல்.ஏ.வுக்கே பல்பு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×