search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 15-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயங்கும்- முன்பதிவு தொடங்கியது
    X

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 15-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயங்கும்- முன்பதிவு தொடங்கியது

    • வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும்.
    • எளிதில் டிக்கெட் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக குறைந்தபட்ச மணி நேரங்களில் செல்லும் வகையில் ரெயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், பயணிகள் இடையே இந்த ரெயில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.50-க்கும், 9.45 மணிக்கு திருச்சிக்கும் செல்கிறது. தொடர்ந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

    இந்த ரெயில் மறுமார்க்கத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.

    இந்த ரெயிலில் 7 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.

    இந்நிலையில் இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளாக மாற்றி இன்று முதல் இயக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.

    பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 15-ந்தேதி முதல் நெல்லை-சென்னை இடையே இரு மார்க்கத்திலும் வந்தே பாரத் ரெயில் 16 பெட்டிகளுடன் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வர இருப்பதால் அதற்கு முன்பாக ரெயில் 16 பெட்டிகளுடன் இயங்க தொடங்கும் என பயணிகள் சந்தோஷமாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பொங்கலுக்கு மறுதினம் முதல் தான் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்தாலும், தொடர் விடுமுறைக்கு பின்னர் சென்னை திரும்பும் போது எளிதில் டிக்கெட் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனிடையே கூடுதல் பெட்டிகளுடன் இயங்க உள்ள வந்தே பாரத் ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளதாக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×