என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் ஆதரவின்றி தவித்த 2 குழந்தைகளை மீட்ட போலீசார்
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.
- குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 2 குழந்தைகள் யாருடைய அரவணைப்பின்றி சுற்றித் திரிந்தனர்.
நீண்ட நேரமாக 2 குழந்தைகளும் சுற்றி வந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் 2 குழந்தைகளை அழைத்து விசாரணை செய்ததில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு-நந்தினி தம்பதியினரின் குழந்தைகளான ராகவஸ்ரீ(5), முகேஸ்(3) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றவர் யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.
இதில் குழந்தைகளின் தாயார் நந்தினியே மருத்துவமனையில் குழந்தைகளை விட்டுச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இந்த குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நந்தினியின் அண்ணன் பாலாஜியிடம் 2 குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சேட்டுக்கும், நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதும், இதனால் தாயார் நந்தினி தனது 2 குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.