என் மலர்
உள்ளூர் செய்திகள்
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை தொடங்கியது
- ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
- கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
சென்னை:
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கியது. பெற்றோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஏப்ரல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினால் குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆதார், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகிய 8 ஆவணங்கள் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
1-8-2019 முதல் 31-7-2020 வரை பிறந்த குழந்தைகள் இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு பிரைமரி நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் கூறுகையில், 'தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கட்டணத்தை மட்டும் அரசு செலுத்தும்.
புத்தகம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் பெற்றோர் செலுத்த வேண்டும். தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சமீபத்தில் கொடுத்துள்ளது. நிலுவை தொகையை படிப்படியாக கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என்றார்.
கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரே பள்ளியில் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.