என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
    • லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 1231 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

    தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வகையான வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா துறையூர், அகவலம், பெருவளையம் ,நெடும்புலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    இந்த தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 470 ஏக்கர் பரப்பில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைகிறது.

    புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது மக்களுக்கு பிடித்தமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.

    இங்கு எலக்ட்ரிக் சொகுசு கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.இந்த வகையான கார்களுக்கு உதிரி பாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்போது இங்கு அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டு விரைவாக தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் மட்டுமின்றி தொழில் வளர்ச்சியில் புதிய இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளதால் அனைத்து தரப்பினரிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடிக்கல் நாட்டு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம். பி. எம். எல்.ஏ.க்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை யொட்டி வேலூர் சரக டிஐஜி தேவராணி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கிரண் சுருதி, மதிவாணன், ஸ்ரேயா குப்தா ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பள்ளி குழந்தைகளின் பாசப்பிடியில் இருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார்.
    • ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 17 ஆண்டுகளாக சந்தான லட்சுமி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    நீண்ட நாட்களாக மாணவ, மாணவிகளுடன் நல்ல முறையில் பழகி எளிமையான முறையில் கல்வி கற்பித்து வருவதால் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராகவும், மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அவரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

    இதனை அறிந்த மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என தடுத்து கதறி அழுதனர். பள்ளி குழந்தைகளின் பாசப்பிடியில் இருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார்.

    பள்ளி குழந்தைகள் ஆசிரியையை சூழ்ந்துகொண்டு தேம்பி தேம்பி அழுதனர். மிஸ் நீங்க போகாதீங்க மிஸ் ப்ளீஸ்.. ப்ளீஸ்.... என்று சில குழந்தைகள் மழலை குரலில் அழுது கொண்டே கூறினர்.

    அதனை பார்த்து ஆசிரியருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டே பள்ளி குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    அதனை பார்த்த மற்ற ஆசிரியர்களுக்கும் கண் கலங்கியது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர். தங்கள் பிள்ளைகள் தேம்பி தேம்பி அழுவதை கண்டு அவர்களுக்கும் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.

    எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு வர மாட்டோம் என அடம்பிடித்து வந்தனர். இந்த ஆசிரியை வந்த பிறகு ஆர்வமுடன் காலையிலேயே எழுந்து பள்ளிக்கு புறப்பட்டு வந்து விடுவார்கள்.

    கடந்த 17 வருடமாக எங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது திடீரென ஆசிரியை மாற்றப்பட்டுள்ளார்.

    மற்றொரு பகுதியில் உள்ள குழந்தைகள் நலனுக்காக அவர் மாற்றப்படுவதாக கூறியுள்ளனர்.

    அப்படியானால் எங்கள் குழந்தைகளின் நிலைமை என்னவாகும். அதை நினைத்து பார்க்க வேண்டும். ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்ததது முதல் வீட்டில் சரியாக சாப்பிடாமல் குழந்தைகள் அடிக்கடி அழுகின்றனர்.

    அவர்களை தேற்ற முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஓய்வு பெற இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது.

    அந்த ஒரு வருடமாவது இங்கேயே பணியாற்ற வாய்ப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தடுப்பணையினை புனரமைப்பது தொடர்பாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் எங்கு தண்ணீர் தேவைகள் இருக்கிறதோ அதனை அறிந்து அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பாலாற்றில் கடந்த 1857-ம் ஆண்டில் கட்டப்பட்ட பாலாறு அணைக்கட்டு உள்ளது. இந்த பாலாறு அணைக்கட்டு மூலமாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்குட்பட்ட விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    இந்த அணைக்கட்டினை ரூ.200 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அணையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

    அப்போது அளித்த பேட்டியில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கு தண்ணீர் தேவைகள் இருக்கிறதோ அதனை அறிந்து அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    1858-ல் கட்டப்பட்ட வாலாஜா தடுப்பணையில் இருந்து தான் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் இந்த தடுப்பணை உள்ளது.

    தடுப்பணையினை புனரமைப்பது தொடர்பாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரி நீர் வழங்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை அரசு முடிவெடுத்தால் கண்டிப்பாக செய்வோம். அதை அடிக்கடி பாமக தலைவர் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் கேட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.

    இதனைக் கேட்டதும் ஆவேசமடைந்த துரைமுருகன் அந்த கேள்வி எல்லாம் எனக்கு தெரியாது எனக்கூறி எழுந்து சென்றார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர்.
    • இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்தனர்.

    அரக்கோணம்:

    கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (வயது 56), தமிழ்ச்செல்வி (44). இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

    உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பை சென்றனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, விருதாச்சலத்தில் இறங்குவதற்கு ரெயில் டிக்கெட் எடுத்து மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் ஏறி பயணம் செய்தனர்.

    அதே பெட்டியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர். இதற்கிடையில், சோலாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது.

    அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதை தெரியாமல் இருவரும் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு, என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

    இந்நிலையில், சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு லேசாக மயக்கம் தெளிந்து உள்ளது. அப்போது, ரெயில் சக பயணிகளிடம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை.

    என்னுடன் வந்த உறவினர் இன்னும் மயக்கத்திலேயே உள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே என கூறியபடி அலறி கூச்சலிட்டார்.

    மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரெயிலில் இருந்த சக பயணிகள் உதவியுடன் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

    அப்போது, மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது.

    பின்னர் ரெயிலில் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்கில் இருந்த டீயை கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வடமாநில ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.
    • புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

    டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைகிறது. இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.

    தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பூனே ஆலையில் வைத்து அசெம்பில் செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்-இன் ஜாகுவார் லேண்ட் ரோவர் ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

    டாடா மோட்டார்ஸ்-இன் புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.

    • தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.
    • மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

    திடீரென விலங்குகள் நடப்பது போன்று நடைமேடையில் நடந்தார். பின்னர் நாய் போல குரைத்தார். குழாயில் வந்த தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.

    இதனை வேடிக்கை பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் வட மாநில வாலிபர் செயலைப் பார்த்து அச்சமடைந்தனர்.

    வட மாநில வாலிபர் எங்கே நம்மிடம் வந்து விடுவாரோ என்று எண்ணி பயணிகள் மெல்ல மெல்ல நகர்ந்தனர்.

    ரெயில்வே போலீசார் அவரது அருகே சென்றனர். கையில் லத்தியுடன் வருவதை பார்த்த வட மாநில வாலிபர் ஓட்டம் பிடித்தார். மேலும் ரெயில்வே அதிகாரி அலுவலகத்திற்குள் புகுந்தார். அங்கிருந்த பெட் துணி போடப்பட்டிருந்த மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.

    பின்னர் அந்த துணியை விலக்கி விலக்கி பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் வட மாநில வாலிபரிடம் இருந்த பையை ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்த ஒரு சீட்டில் செல்போன் எண் ஒன்று இருந்தது. அதனை ரெயில்வே போலீசார் தொடர்பு கொண்டனர்.

    செல்போனில் பேசியவர் வடமாநில வாலிபர் தனது தம்பி என்று கூறினார். இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரும்படி கூறினர்.

    இதற்கிடையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி ரெயில்வே டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

    ரெயில்வே டாக்டர் போலீசாரிடம் வட மாநில வாலிபருக்கு ஒன்றும் இல்லை நன்றாக தான் உள்ளார் என்று கூறினார். ஏதோ விரக்தியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று கூறினார்.

    வாலிபரின் அண்ணனிடம் நடந்தவைகள் பற்றி ரெயில்வே போலீசார் கூறினர். அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு குமார் ஷர்மா என்றும், தற்போது இவருக்கு வேலை இல்லாததால் அண்ணனைத் தேடி வந்ததும் தெரியவந்தது.

    ஏன் இப்படி இவர் செய்கிறார் என்று ரெயில்வே போலீசார் கேட்டபோது தனக்கு தெரியவில்லை என்று வாலிபரின் அண்ணன் கூறினார்.

    இதனையடுத்து கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு ரெயில்வே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக விலை உயர்ந்த 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டிரைவர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.

    அப்போது கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் திடீரென தீ பிடித்து எஞ்சின் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர்.

    கண்டெய்னர் லாரியில் முன்பக்கத்தில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பின்பக்கம் இருந்த பல லட்சம் மதிப்பு உள்ள சொகுசு கார்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பின.

    கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

    அரக்கோணம்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் அபிராமி. இவர்கடந்த வாரம் ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    அங்கிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருத்தணியில் இருந்து ஆவடி செல்வதற்கு மின்சார ரெயிலில் இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது சிக்னலுக்காக நின்றது.

    திடீரென மர்ம நபர் ஒருவர் திடீரென அபிராமி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயினை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் டி.எஸ்.பி கர்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அரக்கோணம் ரெயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் போலீசுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் (வயது 35) என்பதும், அவர் ரெயிலில் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.
    • பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்டிரலில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் ஏ.சி.பெட்டியின் கழிவறை அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். ஓடும் ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.

    இதனால் பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில் பயணிகள் வாலிபரை எழுப்ப முயன்றனர். முடியாததால் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் அளித்தனர்.

    டிக்கெட் பரிசோதகர் வாலிபரை எழுப்ப முயன்றார். அப்போது தான் அவர் மது போதையில் படுத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் அரக்கோணம் வந்ததும், தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கழிவறையின் அருகே படுத்திருந்த போதை வாலிபரை தூக்கி வெளியே இழுத்து பிளாட்பாரத்தில் போட்டனர்.

    இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போதை வாலிபர் எழுந்திருக்க முடியாமல் பிளாட்பாரத்திலும் படுத்துக்கொண்டு உருண்டார்.

    மேலும் அந்த நபர் யார்? எங்கிருந்து பயணம் செய்கிறார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    இதில் ரிஸ்வான் (வயது 22) என்பவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிக்னல் காரணமாக மேல்பாக்கத்தில் ரெயில் நின்றது.

    வெகு நேரமாக ரெயில் செல்லாததால் பொதுப் பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் முன்பதிவு செய்த பெட்டியின் அருகே சென்றார்.

    ரெயில் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் கீழே இருந்த கல்லை எடுத்து முன்பதிவு பெட்டியின் கழிவறையின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் கழிவறையின் கண்ணாடி உடைந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்பு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரிஸ்வானை பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ரெயில்வே போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது.
    • ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அரக்கோணம்:

    திருவள்ளூரை சேர்ந்தவர் மணிவண்ணன் இவருடைய மனைவி பிரித்தி (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஐதராபாத் சென்றனர். அங்கிருந்து தனது தாத்தா பாட்டி ஆகியோருடன் புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ரெயிலில் வந்த போது மர்மநபர்கள் அவர்கள் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடினர்.

    இதனை அறியாத மணிவண்ணன் குடும்பத்தினர் அரக்கோணம் வந்ததும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் கார் மூலம் திருவள்ளூர் சென்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அப்போது தங்கள் பயணம் செய்த பெட்டியில் வட மாநில வாலிபர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் எங்களோடு பேசிக்கொண்டு வந்தனர். எங்கள் கவனத்தை திசை திருப்பி அவர்கள் நகையை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கொள்ளை நடந்த ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.
    • தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு போர்.

    தேர்தலில் ஆட்சி பலம், அதிகார பலம் பண பலம் பெற்று நம்மை எதிர்நோக்கி இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வேட்பாளர்களை தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நிற்கும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆசீர்வாதம் பெற்று எளியவராக நிற்கும் வேட்பாளருக்கு பெருவாரியான வெற்றியை தரவேண்டும்.

    2011-ல் இந்த கூட்டணி எப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்றதோ அதேபோல 2024-ல் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து இந்த மெகா கூட்டணியை அமைத்திருக்கிறோம் .

    இது மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு கூட்டணி என்பதை வருங்கால தேர்தலில் நிருபிப்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளோம் . இந்த தேர்தலில் நாம் பெறும் வெற்றி வருகிற 2026-தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும்.


    பாலாறு மாசடைய காரணமாக ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமிய கழிவுகளை உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டும்.

    நிலத்தடி நீர் பாதித்து புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் அபாயகரமானதாக உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    1000 ரூபாய் தருவதாக ஏமாற்றிய, கஞ்சா புழக்கத்தை கொண்டு வந்து எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடை திறந்துள்ள தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவீர்களா, நெசவும், விவசாயமும் அழிந்ததற்குகாரணம் இந்த அரசுஎன்பதை உணறுகிறீர்களா?

    வேலை வாய்ப்பு இல்லை, வறுமை, பாலியல் கொடுமை, சட்டம் ஒழுங்குசீர்கேடு உள்ள இந்த ஆட்சிக்கு பாடத்தை கொடுத்தால் தான் மீதமுள்ள ஆட்சி காலத்தில் நல்லது செய்வார்கள்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுஇல்லை. இதுவா மக்கள் ஆட்சி என்பதை சிந்திக்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் இப்படி கஞ்சா புழக்கத்தை பார்த்தது இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×