search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி கத்தியால் தாக்கியதாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் நாடகம்
    X

    விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி கத்தியால் தாக்கியதாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் நாடகம்

    • சப்-இன்ஸ்பெக்டர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பிரணிதா. இந்தநிலையில் நேற்று இரவு அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது கோவில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு சிலர் வந்திருந்தனர்.

    அவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதாவிடம் புகார் மனு தொடர்பாக கேட்ட போது, நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது, உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள்க கட்சியினர் சப்-இன்ஸ்பெக்டர் ஒருத்தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டு தங்களை அலைய வைப்பதாகவும் நினைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா போலீஸ் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எதிர்தரப்பினர் கையில் கத்தியால் கீறிவிட்டதாக கூறி காயமடைந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபனிடம் கேட்டபோது, பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா சிவகங்கைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் அங்கு செல்ல விருப்பமில்லாமல் கடந்த 10 நாட்களாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பணி விடுப்பு ஆகாமல் இருந்து வருகிறார்.

    நேற்று காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறியது உண்மையில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், பொய்யாக புகார் அளித்து நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் சமூக வலைதளங்களில் அரசின் மீதும் பலர் குற்றச்சாட்டு கூறுவதற்கு காரணமாக அமைந்துள்ளதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×