என் மலர்
உள்ளூர் செய்திகள்
குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை
- தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
- மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது55). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ரிவன்ராஜா (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரிவன்ராஜா குடிபழக்கத்திற்கு அடிமையானதால் யாரும் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் தனது தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவரது தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் குடிபோதையில் ரிவன்ராஜா தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை தமிழன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இன்று அதிகாலை வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற தமிழன் தான் வெட்டிய அரிவாளுடன் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.