என் மலர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. அலுவலக சீலை அகற்ற கோரும் வழக்கில் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற வேண்டும்- நீதிபதி சதீஷ்குமார் அறிவிப்பு
- அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த பிறகு வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நடைபெறுமா? இல்லை வேறு கோர்ட்டில் நடைபெறுமா? என்பது தெரிய வரும்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வருகிற 25-ந்தேதி இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் நேற்று காலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி, அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார்.
இதே போன்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வக்கீல் ராஜலட்சுமியும் நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிட்டார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் வக்கீல் முகமது ரியாஸ் இன்று காலை நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிட்டார். அப்போது அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு பட்டியலிடப்படாமல் உள்ளது என்றும், பிற்பகலில் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்றே விசாரணைக்கு எடுக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கான மனு முறைப்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனால் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த பிறகு வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நடைபெறுமா? இல்லை வேறு கோர்ட்டில் நடைபெறுமா? என்பது தெரிய வரும்.