search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
    X

    திருப்பூர் நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

    • ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.
    • நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என இதுவரை 181 பறவை இனங்கள் வந்துள்ளன.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இதில் சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் மீன்பிடிப்பு பகுதியாக நீர் நிறைந்து காணப்படுகிறது. திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இருந்து வரும் சாயக்கழிவுகள் கலந்து குளத்தின் நீர் மாசுபட்டு இருந்தது.

    இதையடுத்து இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் குளத்தை சீரமைக்க வேண்டுமெனவும் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இதனை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு 2015-ம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நஞ்சராயன் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குளத்தினை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன.

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்லும்.

    அந்த வகையில் நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என இதுவரை 181 பறவை இனங்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும் என சமீபத்தில் தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதையடுத்து அதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

    பல வருடங்களாக நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது திருப்பூர் பகுதிக்கு சுற்றுலாத்தலமாக மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பறவைகளைப் பற்றி பல்வேறு விஷயங்களை கற்கும் இடமாக மாறும் என்றார். தமிழகத்தில் வேடங்தாங்கல், உள்பட 16 பறவைகள் சரணாலயங்கள் உள்ளது. தற்போது திருப்பூர் நஞ்சராயன்குளம் 17-வது சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×