என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 2 சிறுவர்கள் பலி
- ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர்.
- ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி:
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் யுவராஜ் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்காக தனது மனைவி சத்யா (35) மகன்கள் பிரகதீஸ்வரன் (11), அரிப்பிரசாத் (7) மற்றும் உறவினர்களுடன் சென்றார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு, யுவராஜின் உறவினரான சென்னை குன்றத்துரை சேர்ந்த கலிவரதன் மகன் உத்தரகுமார் (30), அவரது மனைவி உறவினர்கள் என மொத்தம் 9 பேர் சென்னை செல்ல திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டனர். வீடு திரும்பும் வழியில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புலி வந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டனர். இதனை தொடர்ந்து யுவராஜின் மாமியார் வீடு உள்ள கப்பை கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கப்பை கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு திருப்பத்தில் வந்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர். இதில் ஒரு சிலர் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளை பிடித்து வந்து மேலே ஏறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மீதம் இருந்தவர்களை கிணற்றில் இருந்து மீட்டு அவர்களை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் யுவராஜின் 2 குழந்தைகளை மீட்க முடியாததால், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி இறந்த 2 குழந்தைகளின் உடலை மீட்டனர். தொடர்ந்து அங்கு வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கிணற்றில் மூழ்கி இறந்த பிரகதீஸ்வரன், அரிபிரசாத் ஆகியோரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ், அவரது மனைவி சத்யா, உத்தரகுமார், அவரது மனைவி பொன்னி (20), மற்றும் உறவினர்களான பாஞ்சாலி (50), அம்மச்சி (50), அம்மச்சியின் மகன் ஆகாஷ் (18) ஆகிய 7 பேரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு வீடு திரும்பிய போது, ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.