என் மலர்
உள்ளூர் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி- நேரு விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- நேரு ஸ்டேடியத்தில் செஸ் போட்டி தொடக்க விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையை பார்வையிட்ட முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
- மேடையில் ஆங்காங்கே செஸ் காய்கள் இருக்கும்படி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
சென்னை:
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இதில் பங்கேற்க 187-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்-வீராங்கனைகள் சென்னைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளனர். இவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.
இதையொட்டி தொடக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
நேரு ஸ்டேடியத்தில் செஸ் போட்டி தொடக்க விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையை பார்வையிட்ட முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். மேடையில் ஆங்காங்கே செஸ் காய்கள் இருக்கும்படி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
நேரு உள் விளையாட்டு அரங்கின் நுழைவு வாயிலில் செஸ் காய்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளையும் ஒலிம்பியாட் போட்டி சின்னமான தம்பி உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
விழா ஏற்பாடு பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.