என் மலர்
உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே பெண் கொலை
- மனைவி சின்னப் பிள்ளைக்கும், ராமருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
- மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (55). கூலித் தொழிலாளி. இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபிள்ளை(50) என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ராமருக்கும் அவரது மாமியார் குடும்பத்தினருக்கும் கடந்த 20 வருடமாக பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமரின் மாமியார் இறந்து விட்டார்.நேற்று தன்னுடைய தாயின் கரும காரியத்திற்கு செல்வதாக ராமரிடம் சின்னபிள்ளை தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் கரும காரியத்திற்கு கணவரிடம் சொல்லாமல் சின்னபிள்ளை நல்லாத்தூர் கிராமத்திற்கு சென்றதாகத் தெரிகிறது. பின்னர் மாலை வீட்டுக்கு வந்த மனைவி சின்னப் பிள்ளைக்கும், ராமருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமர் நேற்று இரவு 9 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பிள்ளையின் தலையில் அம்மி குழவி கல்லால் தலையில் பலமுறை அடித்துள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ராமர் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று தன் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னப் பிள்ளையின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.