என் மலர்
தமிழ்நாடு
தமிழக மக்களை பற்றி மு.க.ஸ்டாலினுக்கு கவலையில்லை- எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு
- இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.
- விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த அரசு அம்மாவின் அரசு . விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியது.
திருப்பூர்:
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி, வால்பாறையில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி , மங்கலம் வழியாக பொள்ளாச்சிக்கு சென்றார்.
அவருக்கு அவினாசி, மங்கலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவிநாசியில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளை தாண்டி அ.தி.மு.க. தொண்டர்கள் ஆதரவோடு அதி.மு.க. பொதுச்செயலாளராக விவசாயியான நான் பொறுப்பேற்றது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.
விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த அரசு அம்மாவின் அரசு . விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியது.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்தினால் அவிநாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் நிறைவேற்றப்படாமல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்திருந்தால் தற்போது அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஆமை வேகத்தில் அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
ஒரு சொட்டு குடிநீர் கூட வீணாக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் குடிமராமத்து பணிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது அந்த பணிகளும் இல்லை.அந்த அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது வரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
விடியா தி.மு.க. அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெற்ற முதியோர் உதவித் தொகையை கூட நிறுத்திவிட்டது.மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
முதியோர் உதவித்தொகை ,பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய், கியாஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் எதுவும் கொடுக்கவில்லை.மத்திய அரசாங்கத்தை குறை கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது.ஆனால் மாநில அரசு இன்னும் குறைக்கவில்லை.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்மட்டும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசு தற்போது எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு இலவசமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது மின்சாரம் எப்போது இருக்கும் என்றே தெரியவில்லை.
வருடத்திற்கு ரூ.15000 கோடி வருவாய் மின்கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு வருகிறது. ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். 2ஆண்டு காலம் கொரோனாவால் மக்கள் கஷ்டப்பட்டனர். ஆனால் அதனை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும் தான் சிந்திக்கிறார். என் வீட்டுக்கு வருமானம் வந்தால் மட்டும் போதும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.