என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாயமான ஜெயலலிதாவின் பரிசு பொருட்களை மீட்க எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரம்
- வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட ஜெயலலிதாவின் மாயமான பரிசு பொருட்களை மீட்க எடப்பாடி பழனசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- அலுவலகத்தில் இருந்த பொருட்களில் எவையெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்துக் செல்லப்பட்டு உள்ளன என்பதை கண்டறிந்து கணக்கெடுத்து வருகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது அ.தி.மு.க. அலுவலக பூட்டை உடைத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.
இந்த மோதலை தொடர்ந்து போலீசார், வருவாய் துறையினர் உதவியுடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகத்தை திறந்து சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று அ.தி.மு.க. அலுவலக சீல் அகற்றப்பட்டு பூட்டு திறக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தின் சாவி மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மகாலிங்கம் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு நாற்காலிகள் உடைக்கப்பட்டு கிடந்தன. அறைகளில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோக்களும் கீழே தள்ளிவிடப்பட்டு கிடந்தது. 2-வது மாடியில் கணக்கு அலுவலக அறை உள்ளது. அந்த அறையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட நினைவு பரிசுகள் இருந்தன. ஜெயலலிதாவின் வெள்ளி சிலை, வாள், செங்கோல்கள் போன்றவை இருந்ததாகவும், அவை காணாமல் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.
தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.
அலுவலகத்தில் தற்போதைய நிலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட ஜெயலலிதாவின் மாயமான பரிசு பொருட்களை மீட்க எடப்பாடி பழனசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அலுவலகத்தில் இருந்த பொருட்களில் எவையெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்துக் செல்லப்பட்டு உள்ளன என்பதை கண்டறிந்து கணக்கெடுத்து வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் போலீசில் புகார் கொடுக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்து உள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் நிறைய இருந்தது. அதை எடுத்து சென்று விட்டனர். அந்த உறுப்பினர் அட்டைகள் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவற்றை அதில் இருந்து எடுத்து விடுவோம். கணக்கு ஆவணங்கள் இருந்த பைல்கள் மற்றும் கம்ப்யூட்டர் டிஸ்க்குகளையும் எடுத்து சென்று விட்டனர். மாயமான பொருட்களை மீட்க போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்றார்.