search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் அரசு பஸ் பணியாளர்கள் நள்ளிரவில் போராட்டம் -பரபரப்பு
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பஸ் ஊழியர்கள்.

    பல்லடத்தில் அரசு பஸ் பணியாளர்கள் நள்ளிரவில் போராட்டம் -பரபரப்பு

    • பஸ் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த மகாலட்சுமி நகர் பிரிவில் இருந்து வந்த கார் ஒன்று அரசு பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென உள்ளே புகுந்து பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் திரும்பியது.
    • இதனை பார்த்த டிரைவர் அருண்குமார் உடனடியாக பேருந்தை பிரேக் போட்டு லாகவமாக திருப்பினார். இதனால் பேருந்து கார் மீது மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் நேற்று இரவு 11 மணி அளவில் புறப்பட்டது. 20க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர். பஸ்சை அருண்குமார் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக மாரிமுத்து என்பவர் இருந்தார்.

    இந்தநிலையில் பஸ் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த மகாலட்சுமி நகர் பிரிவில் இருந்து வந்த கார் ஒன்று அரசு பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென உள்ளே புகுந்து பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் திரும்பியது.

    இதனை பார்த்த டிரைவர் அருண்குமார் உடனடியாக பேருந்தை பிரேக் போட்டு லாகவமாக திருப்பினார். இதனால் பேருந்து கார் மீது மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முன்னால் சென்ற கார் அருகே உள்ள திருமண மண்டபத்திற்குள் நுழைந்தது.

    இதனையடுத்து மண்டபத்தின் முன் பஸ்சை நிறுத்திய அருண்குமார், கண்டக்டர் மாரிமுத்து மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் காரில் பயணம் செய்தவர்களிடம், இப்படி தாறுமாறாக ஓட்டலாமா, விபத்து ஏற்பட்டு இருந்தால் என்ன செய்வது எனக் கேட்டுள்ளனர்.

    அப்போது காரில் வந்தவர்களுக்கும், பஸ்சில் வந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. டிரைவர்-கண்டக்டரை காரில் வந்தவர்கள் தாக்கினர்.

    இது குறித்து தகவல் அறிந்து அந்த வழியே சென்ற அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் திருமண மண்டபம் முன்பு பஸ்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது காரை குறுக்காக ஓட்டி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பஸ் டிரைவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இது குறித்து அரசு பஸ் டிரைவர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த செல்வகுமார், பிரேம்குமார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×