search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்குடி அருகே சமத்துவம்: மும்மதத்தினர் இணைந்து கட்டிய பள்ளிவாசல்
    X

    காரைக்குடி அருகே சமத்துவம்: மும்மதத்தினர் இணைந்து கட்டிய பள்ளிவாசல்

    • பனங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூல் செய்யப்பட்டது.
    • வரி வசூல் மூலம் கிடைத்த ரூ. 1 ½ கோடி மதிப்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் பெரும்பாலும் இந்துக்கள் வசித்து வருகின்றனர். கணிசமான அளவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். ஜாதி, மத வேறுபாடின்றி இந்தப்பகுதி மக்கள் கோவில் திருவிழாக்களை முன் நின்று நடத்துவது வழக்கம்.

    பனங்குடி கிராமத்தில் பழமையான பள்ளிவாசல் இருந்தது. இந்த பள்ளிவாசலின் கட்டிடம் சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் அங்கு தொழுகை நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்கான ஆலோசனை கூட்டம் ஜமாத் தலைவர் தலைமையில் நடந்தது.

    இதில் அந்தப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மும்மதத்தினரும் இணைந்து பள்ளிவாசலை கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பனங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூல் செய்யப்பட்டது. இதன்மூலம் கிடைத்த ரூ. 1 ½ கோடி மதிப்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் அந்தப்பகுதி மக்கள் அனைவரும் அங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன்பின் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இந்த சம்பவம் விளங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×