என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1500 லஞ்சம் வாங்கிய பல்லடம் ஊராட்சி ஒன்றிய பெண் அதிகாரி கைது
- பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார்.
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.
அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.
இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.
அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.