என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் கருத்து: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.-வினர் கைது
- பா.ம.க.வினரிடம் போலீசார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தினர்.
- போராட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசு மீது குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர் வேறு வேலை இல்லாமல் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிடுவதாக கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க.வினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று பா.ம.க.வினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பா.ம.க.வினரிடம் போலீசார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 97 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில் இன்று பா.ம.க. வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.