என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் பஸ் நிலையம், பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிப்பு
    X

    கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.

    கரூர் பஸ் நிலையம், பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிப்பு

    • சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். 8 நாட்கள் வரை நீடித்த இந்த சோதனை 3-ந்தேதி நிறைவடைந்தது.

    சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, சகோதரர் அசோக்குமார் வீடு, கொங்குமெஸ் மணி, ஆடிட்டர் வீடு, நகைக்கடை உள்ளிட்ட 8 இடங்களில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், மாவட்ட பா.ஜ.க. அலுவலகம், மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சர்ச் கார்னர், வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தங்களது ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதேபோல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×