search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணை மின் நிலையத்தை மாற்றி அமைக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
    X

    துணை மின் நிலையத்தை மாற்றி அமைக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

    • தமிழ்நாடு அரசின் தகவல் ஆற்றுப்படை எனும் இணைய தளத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள குமரிக்கல்பாளையம் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, உயரமான ஒரே கல்லால் ஆன நடுகல் உள்ளது. இந்தக் கல் இங்கு குமரிக்கல் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நடு கல் தரைக்கு மேல் 30 அடி உயரத்திலும் தரைக்கு கீழ் 15 அடி ஆழத்திலும் உள்ளது. இந்த நடு கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பல்வேறு தொல்லியல் எச்சங்கள் காணப்படுகிறது. பாறை குழிகள், கல்வெட்டுக்கள், பானை ஓடுகள் காணப்படுகின்றன. இந்த ஊரில் உள்ள குளத்தில் ஆய்வு செய்தால் பல்வேறு தொல் பொருள் ஆய்வுகள் கிடைக்கும். என தெரிய வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் ஆற்றுப்படை எனும் இணைய தளத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கீழடி தொல்பொருள் கண்காட்சியில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய 32 இடங்களில் இந்த இடமும் ஒரு இடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவுத்தம்பாளையம் வருவாய் கிராமம் மற்றும் குமரிக்கல்பாளையம் ஆகிய ஊர்களில் தற்போது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 142.95 ஏக்கரில், மிகப்பெரிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுப்பு பணிகளை செய்து வருகிறது. துணை மின் நிலையம் அமைய உள்ள இடம் குமரிக்கல்லுக்கு மிக மிக அருகிலேயே இதன் எல்லை அமைகிறது.

    எதிர்காலத்தில் மின்மாற்றிகள் வெடித்து விபத்து ஏற்பட்டால், இந்த கல் அழிவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதோடு தொல்லியல் ஆய்வு செய்யவும் மிகப்பெரிய சிரமத்தை இந்த துணை மின் நிலையம் ஏற்படுத்தி விடும். உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படும் போது மழைக்காலங்களில் இடி, மின்னல் அதிகமாக இருக்கும் சூழல்களில் உயர்மின் கோபுர பாதை களை நோக்கி மின்னல் இடிகளும் ஈர்க்கப்படும். அவ்வாறான சமயத்தில் இந்த கல்லுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு கல் அழிந்து விடும்.

    எனவே துணை மின் நிலைய திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வலியுறுத்தி காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை மின் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×