என் மலர்
உள்ளூர் செய்திகள்
மழை, புயலால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையூறு வருமா?
- திருவொற்றியூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
- அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வடபழனியில் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை:
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை (22-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. அது வருகிற 23-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.
வருகிற 24-ந்தேதி தீபாவளி அன்று அது புயலாக வலுவடையும். அது 25-ந்தேதி ஒடிசா கடற்கரையையொட்டி மேற்குவங்காளம்- வங்காளதேச கடற்கரையை அடைகிறது.
இதன்காரணமாக தமிழகத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு புயல் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றின் திசையை மேற்கு நோக்கி மாற்றிவிடும். இதன்காரணமாக மழை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே புயல் காரணமாக தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையூறு வராது.
இதற்கிடையே சென்னையில் இன்று அதிகாலையில் விடிய, விடிய மழை பெய்தது. அதேநேரத்தில் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் இரவு 2 மணிக்கு பிறகு மழை பெய்யத்தொடங்கியது. அதிகாலை 4 மணி அளவில் மழை வெளுத்து வாங்கியது. காலை 6 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கியது.
சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, கே.கே.நகர், வளசரவாக்கம், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை, பெரம்பூர், எழும்பூர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு, புரசைவாக்கம் என சென்னை நகரம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.
அதேநேரத்தில் திருவொற்றியூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வடபழனியில் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வடபழனி பஸ் நிலைய பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் அதிகமாக காணப்பட்டது. அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் சாலையில் ஓடிய வெள்ளத்தில் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.
இதேபோல் கே.கே.நகர் ராஜமன்னார் சாலையிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு மழை நீர் வடிகால்வாய் பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகினார்கள். மேலும் கே.கே.நகர் பொப்புலி ராஜா சாலையிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.