என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு 2 வாரத்தில் ரூ.17 லட்சம் அபராதம்
    X

    பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு 2 வாரத்தில் ரூ.17 லட்சம் அபராதம்

    • சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
    • மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16.10.2022 முதல் 29.10.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்து 400 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரத்து 900 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 318 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றைத் தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இதனை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×