search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை முருகன் மலை கோவிலில் பாறை இடுக்குகளில் அத்துமீறும் காதல் ஜோடிகள்- பக்தர்கள் வேதனை
    X

    விராலிமலை முருகன் மலை கோவிலில் பாறை இடுக்குகளில் அத்துமீறும் காதல் ஜோடிகள்- பக்தர்கள் வேதனை

    • சில ஜோடிகளின் சேட்டைகள் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்துகிறது.
    • மலைப்பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்திருத்தலத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கிறார்கள். இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைக்கோவிலில்

    தோகை விரித்தாடும் வண்ண மயில்களின் நடமாட்டம் பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அடர்ந்த வனப்பகுதி, வித்தியாசமான பாறைகள் குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் குடும்ப சகிதம் மலைக்கோவிலுக்கு இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் மலையேறி முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். இவ்வாறான சூழலில் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் அருவருக்கத்தக்க சம்பவங்கள் நாளும் நடந்தேறுவது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.

    சமீப காலமாக உள்ளூர் மற்றும் வெளியூர் காதல் ஜோடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய காதல் ஜோடிகள் மணிக்கணக்கில் அங்குள்ள பாறை இடுக்குகளில் அமர்ந்து கடலை போடுகிறார்கள். மேலும் சில ஜோடிகளின் சேட்டைகள் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்துகிறது.இதனைக் கண்டு பக்தர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஆகவே அத்து மீறும் காதல் ஜோடிகளை மலை அடிவாரத்திலேயே அடையாளம் கண்டு மலைப்பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, எங்கள் காவல் நிலையத்தில் போதிய அளவுக்கு போலீசார் இல்லை. சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகளை கையாள்வதற்கு கூட நேரம் போதுமானதாக இல்லை. பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால் நிரந்தரமாக மலைக்கோவிலில் காவல்துறையினரை கண்காணிப்பில் ஈடுபடுத்த இயலவில்லை என்றனர்.

    எனவே மாவட்ட காவல்துறை மேற்கண்ட பிரச்சனையின் அதி தீவிரத்தை உணர்ந்து விராலிமலை காவல் நிலையத்திற்கு போதிய காவலர்களை பணியமர்த்த வேண்டும் அதோடு பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×