என் மலர்
உள்ளூர் செய்திகள்
தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது
- ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் மதன்குமாரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
- படுகாயமடைந்த மதன்குமாருக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போரூர்:
விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் என்கிற ராஜா கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் மதன்குமார் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மதியம் ராஜா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த மதன்குமாரிடம் "உன் தாயாரிடம் பேச வேண்டும் வெளியே வர சொல்" என்று கூறியதாக தெரிகிறது.
அப்போது அவரை கண்டித்த மதன்குமார் வெளியே போகும்படி கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் மதன்குமாரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மதன்குமாருக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் மதன்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது32) என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
ராஜா மது போதைக்கு அடிமையானதால் மகாலட்சுமி அவரை பிரிந்து சென்று கார்த்திக்குடன் சில ஆண்டுகள் ரகசிய குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மகாலட்சுமி மீண்டும் கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த சென்றுவிட்டார்.
இதனால் தனது கள்ளக்காதலி மகாலட்சுமியை பிரிந்து தவித்து வந்த கார்த்திக் அடிக்கடி அவரது வீடு தேடி சென்று ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதை மகாலட்சுமியின் மகன் மதன்குமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மதன்குமாரை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.