search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ண ஓவியங்கள், அழகிய பூஞ்செடிகளுடன் வியாசர்பாடி மேம்பாலத்தை அழகுபடுத்தும் பணி தொடங்கியது
    X

    வண்ண ஓவியங்கள், அழகிய பூஞ்செடிகளுடன் வியாசர்பாடி மேம்பாலத்தை அழகுபடுத்தும் பணி தொடங்கியது

    • சத்தியமூர்த்தி நகருக்குச் செல்லும் பாலத்தின் கீழ் பகுதியில் சிறுவர்கள் விளையாட இடம் ஒதுக்கப்பட உள்ளது.
    • ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டதால் அப்பகுதி சுகாதாரமான வகையில் காணப்படுகிறது.

    சென்னை:

    வியாசர்பாடி மேம்பால தூண்களில் அழகிய வண்ண ஓவியம் வரையும் பணிகள் நடந்து வருகிறது.

    சென்னை வியாசர்பாடி மேம்பாலம் இரட்டை கிளை வடிவத்தில் பிரம்மாண்டமான வகையில் கட்டப்பட்டது ஆகும். இந்த பாலம் சத்தியமூர்த்தி நகருக்கும் எருக்கஞ்சேரி சாலைக்கும் செல்லும் வகையில் அமைந்து உள்ளது.

    இப்பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

    இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்தது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது.

    மேலும் மேம்பாலத்தின் அடியில் போலீசார் பறிமுதல் செய்த இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மேம்பாலம் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் மண் நிரப்பப்பட்டு அழகிய பூஞ்செடிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பார்க்க பசுமையாக காணப்படுகிறது.

    மேம்பால தூண்களில் அழகிய வண்ண ஓவியங்கள், பழங்கால சிற்ப ஓவியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சத்தியமூர்த்தி நகருக்குச் செல்லும் பாலத்தின் கீழ் பகுதியில் சிறுவர்கள் விளையாட இடம் ஒதுக்கப்பட உள்ளது.

    வியாசர்பாடி மேம்பாலத்தின் அடியில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டதால் அப்பகுதி சுகாதாரமான வகையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×