என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக போராட்டம்- எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 342 பேர் மீது வழக்கு
- தமிழகத்தில் 24 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி படம் வெளியானது.
- சென்னை, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை:
கேரள இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் திட்டமிட்டபடி படம் நேற்று வெளியானது.
இதையடுத்து படத்தை தடைசெய்யக்கோரி முஸ்லிம் அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழகத்தில் 24 தியேட்டர்களில் கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கேரள ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தமிழகத்தில் படம் வெளியான நகரங்களில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்களில் போராட்டம் நடந்தது. அண்ணாநகர் வி.ஆர்.மால், விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, வேளச்சேரி பி.வி.ஆர். தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தியேட்டர்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 இடங்களிலும் 342 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது அனுமதியின்றி கூடியதாக 151 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
நேற்றைய போராட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் யாரும் திடீரென தியேட்டர்கள் முன்பு கூடிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.